Friday, 24 February 2012

கடிதங்கள்...

மனதிற்குள் கையை விட்டு நாம் எடுத்த உணர்வுகளை
மையை ஊற்றி மசிய வைத்து பிரதி எடுக்கும் வடிவங்களை
வார்த்தைகளில் படிய வைத்து தாள்களிலே தங்க வைக்கும்
கடிதங்கள் நமக்கு  காலத்தின் உயில்கள்;

அஞ்சல்காரர் வருகை எதிர்பார்த்த தினங்கள்
பிடித்தவரின் கடிதம் பிரித்திட்ட கனங்கள்
இருகடித இடைவெளியில் உருண்டோடும் நாட்களில் -
காத்திருப்பின் வாசனையில் பூத்திருக்கும் யோசனைகள்
அன்பிற்கு உரமாக அடிமனதில் இறங்கி விடும்
காலத்தை கூட்டி வந்து காகிதத்தில் பூட்டி வைக்கும்
அற்புத குணம் அத்தகைய கடிதம் தரும்;

கடிதங்களின் கடிவாளம் காலத்தை பிடித்திழுக்க
எழுத்தின் மீதேறி எண்ணத்தில் அமர்ந்தபடி
ஞாபக குதிரையின் நாலுகால் பாய்ச்சலிலே
நினைவுச் சாலையிலே நீண்ட தூரம் போய்வரலாம்;

விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் கொடுத்த விலையோ-
பணத்தின்பின்  அனைவரும் பறக்கின்ற நிலையோ-
அன்புப் பயிரில் அவசர களையோ-
அற்புதமான எதையும் அவமதிக்கும் கலியோ-
மின்னஞ்சல் நன்று என்றோம் குறுஞ்செய்தி கொண்டு வந்தோம்
கடிதம் எழுதும் கலையை கையாலே கொன்று போட்டோம்.

இனிமேல் வாராது கடிதமெழுதும் காலங்கள்
இருக்கின்றவற்றையேனும் பாதுகாப்போம் வாருங்கள்
அன்பின் பசை அதிலிருக்கும் தேடுங்கள்
ஆண்டுக்கொரு முறை அதை படித்து பாருங்கள்
அடுத்த தலைமுறைக்கு சொத்தாக தாருங்கள்.

Thursday, 9 February 2012

பிறப்பு

ஊசிமுனையிலும் சிறுத்த உயிரணுவில்
வீசி எறியப்பட்ட வினையின் விதையுள்  
நாசியில்  காற்று பெற்று உலவும் நாமும்
நேசிக்க நேர்கின்ற உறவை உணர்வை
பூசித்து சேகரிக்கும் பொருளை பணத்தை
வாசித்துப்   பார்க்கின்ற நேரம் வந்தால் - அது
யோசிக்கத் தூண்டும் ஞானம் தந்தால்
காசிக்குப்  போய்வரத்  தேவை இல்லை
காலநதி மட்டுமே இங்கே கங்கை.