Thursday 22 December 2011

விதி

இணையத்தில் பதிவு செய்த பயணச்சீட்டை
இரண்டு பிரதி எடுத்து வைக்கும் வழக்கம் சிலருக்கு;
பத்து ரூபாய் பெறாத பொருள் என்றாலும்
பல கடை பார்த்து வாங்கும் பழக்கம் பலருக்கு;
முதுமை காலத்தை முன்னரே திட்டமிட்டு
இளமையிலே சேமிக்கும் திட்டம் சிலருக்கு;
பத்து பொருத்தம் இருந்தாலே ஒத்து வரும் என்றெண்ணி
திருமணம் செய்து கொள்ளும் தீர்க்கம் பலருக்கு;
அனைத்திலும் திட்டமிட்டு தவறுகளை செப்பனிட்டு
முழுமையான அர்பணிப்பே முதன்மையான உணர்வென்னும்
முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் நம்மில் பல பேர்
எதிர்பாரா ஒன்றில் ஏமாறுதல் ஏனோ?

Wednesday 7 December 2011

பறந்த காலம்

மீதமிருக்கும் குப்பையிலிருந்து
சேகரித்த குச்சிகள் கொண்டு
கூடு கட்ட பறக்கிறது
வீடு வந்த பறவை;

தாழ்வாக பறந்தோ
சாளரத்தில்  அமர்ந்தோ
நினைவை புதுப்பிக்க
தினமும் வரும் பறவை;

நாமிருப்பது கூடா?
பறவை இருந்த வீடா?

 
 

Thursday 17 November 2011

ஊன் சிறப்பு

முன்பதிவு செய்த பயண தினத்தில்
வாழும் இடம் மாறும் வைபவத்தில்

வழியப்பனுப்ப வந்தோரில் வகைக்கு ஒன்றாய்
ஏழு பேரேனும் தேவை இருக்கையில் இருத்த.


முன் அனுபவம் உள்ளவர் பின் தலை பிடிக்க
மூவிரண்டு பேர்கள் முழுவதும் தூக்க
பச்சை மூங்கிலை படுக்கை ஆக்கி
கச்சை புதியதாய் முழுதும் போர்த்தி
பாராத  தேசத்திற்கு போகும் - திரும்பி
வாராது உருவம்எந் நாளும்.


காற்றிருந்த பாதையெங்கும் காலம் அடைத்தோ
சேர்த்திருந்த சுமைகளின் பாரம் பொருட்டோ
உயிர் நீத்த உடலில் பன்மடங்கு கூடும் எடை
யுகங்கள் கடந்தாலும் உண்டோ இதற்கு விடை?


நெஞ்சில் நெய்யூற்றி நெடுந்தீ மூட்டியபின்
மின்கலத்தின் உள்விட்டோ  மிதமான விறகிட்டோ
ஒட்டி உறவாடிய ஒருகோடி நிமிடங்களை
கட்டிப்  பொட்டலமாய் கையிலே தந்திடுவார்.


உடல் மெல்ல சாம்பலாகும் ஒரு நொடி காட்சி
காலமே கடவுள் என்பதன் சாட்சி
மிஞ்சிடும் நினைவுகள் உணர்வின் மாட்சி

இறப்புகளில் சிறப்பது இறைவனின் ஆட்சி.

Thursday 27 October 2011

"சமச்சீர்" கல்வி

குப்பனோ சுப்பனோ குபேரனுக்கு அப்பனோ
பள்ளிக்குப்   போகாத பாமரனோ
பட்டங்கள் பெற்ற நாவலனோ
அப்பழுக்கற்றவனோ அற ஒழுக்கமற்றவனோ
எவனாய் ஆயினும் எங்கே போயினும்
எதிர்கொள்ளும் நிகழ்வு பல
ஏனென்ற கேள்வி தரும்.
பிறிதொரு பொழுதிலோ பின்னொரு நிகழ்விலோ
அதன் பதில் ஆழமாய் அடிமனதில் இறங்கி விடும்
கத்தியால் சொருகினாற்போல் புத்திக்கு விளங்கி விடும்
அனுபவச்  செறிவோ ஆன்மீக விரிவோ
ஒன்று மூலம் மற்றொன்றில் ஓரளவு தேர்ச்சி வரும்
நன்று தீது எல்லாமும் நாளடைவில் நீர்த்து விடும்
கடவுளின் பள்ளியில் காலமெனும் ஆசிரியர் 
வயதின் வகுப்புகளில் வந்தெடுக்கும் பாடங்களில்
சமச்சீர் கல்வி சற்றேனும் சாத்தியமே!

Monday 10 October 2011

மழை பெய்த வீதி...

மழையாடும் தெருவில்
நனைந்தோடும் நாய் போல்
அலையும் நினைவை
கழுவும் மழை.

மேகநீர் பாசனத்தில்
தேகவயல் உழுது
ஞாபகங்கள் பயிரிடும்
வாகனம் மழை.

வசதியான இருக்கை; வந்து தொடும் தூறல்;
உருகும் நினைவு பருகும் மழை
பருகிய நினைவால் பருத்த மேகம்
நினைவின் அடர்த்தியால் கறுத்த வானம்
மீண்டும் நினைவை மழையாய் பொழிய
மழையை நினைவாய் நாமும்  அருந்த
மழைக்கும் நமக்கும் இருக்கும் உறவு
மனதையும் நினைவையும் இணைக்கும் விழுது.

Friday 16 September 2011

தங்க நாற்கர நெடுஞ்சாலை...

ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் முதியோர்
ஆங்காங்கே நின்று கையசைக்கும் சிறியோர்
சட்டென்று தோன்றி மறையும் கிராமத்து வீடுகள்
சாலையோர நிழலில் அசை போடும் மாடுகள்
சக்கரங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நெற்போர்
சைக்கிளுடன் நின்று இளநீர் விற்போர்
இவைகள் ஏதுமின்றி இருபுறம் வேலியிட்டு
மூச்சு முட்டும் வேகத்தில் முன்னேறும் வாகனத்தில்
நன்றாய்த்தான் இருக்கிறது நாற்கர சாலை பயணம்
ஒன்றை இழந்த ஒருவித நெருடலுடன்...




Thursday 25 August 2011

ஊவா முள்

புத்தனாக விரும்பி புறப்படும் பல பேரும்
போதாத காலம் வந்தால் தோதான காரணத்தால்
சித்த நேரம் சேற்றில் இறங்கி  சிலுவை சுமந்திடுவர்.
மொத்தமாக கொடுப்பதே சுத்தமாக இருப்பதெனும்
ஒத்துவரா கொள்கையுடன் சுத்தி வரும் மனங்களுக்கு
எல்லாவித உறவிலும் ஏதேனும் ஏமாற்றம்
பிரிந்தாலும் சேர்ந்தாலும் பின்குறிப்பில் முகம் காட்டும்.
சந்தனத்தை அரைத்து சாக்கடையில் கரைத்து
மாற்றம் என்று நுகர்வதும் நாற்றம் என்று நகர்வதும்
நமக்கு ஒன்றும் புதிதில்லை
நாலில்* இரண்டு** பழுதில்லை!

* அறம், பொருள், இன்பம், வீடு
** அவரவர் வாழ்க்கை பொறுத்து...


Friday 12 August 2011

காதல்

நகரத்து நச்சு நான் இயற்கையின் அச்சு நீ
இருவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவு
வருடத்திற்கு சில முறையோ அடுத்தடுத்த விடுமுறையோ
உனைப் பார்க்க எனக்கு இவை மட்டுமே கணக்கு
பழகிப்போன சாலைகளில் பரபரக்கும் வேளைகளில்
ஓரம் நிற்கும் மரங்களில் ஒளிந்திருக்கும் உன் முகம்


கோடை வாடை குளிர் மழையென
பருவத்தின் பாவனையில் பவனி வந்து
ஆண்டு முழுதும் நாளும் பொழுதும்
உனது நினைவை ஊட்டுகிறாய் நீ
உன்னுடன் இருக்கையில் நான் பெறும் அமைதி
உன்னுள்ளே நடக்கையில் நீ தரும் நிம்மதி
பெரியோர் இதைத்தான் பேரின்பம் என்றனரோ?

நமக்கென வைத்திருக்கும் பிரத்யேக பாதையில்
பேச்சின்றி பிரயாணம் போவதே
நீ எனக்கு அளித்த வரம் - இவை நம் உறவின் பலம்
பைத்திய காதல் என்று பார்ப்போர் சொன்னாலும்
தைத்ரிய நுட்பத்தில் தழைத்தோங்கும் நெறிமுறையில்
வனம் மேல் வாய்த்த காதல் வயதுடன் வளர்கிறது
மரபு சார உணர்வு இது மௌனமாய் தொடர்கிறது...

Friday 15 July 2011

கடலின் மடியில்...

அலையில் நனைந்து குழந்தையாய் மாறலாம்
கரையில் நடந்து கவலைகள் நீக்கலாம்
காற்று வாங்கி களைப்புகள் போக்கலாம்
நேற்றை எடுத்து நீருக்குள் வீசலாம்

அர்த்தமற்ற அரட்டையிலும் ஆனந்தம் சேர்க்கலாம்
அமைதியாய் அமர்ந்து நினைவுகள் கோர்க்கலாம்
ஆழமாய் யோசித்து அழுதும் தீர்க்கலாம்
அவ்வபொழுது மனதை உழுதும் பார்க்கலாம்

புத்தியை மேம்படுத்தும் யுக்திகள் தோன்றலாம்
புரியாத கணக்குகளின் நுனியவிழ்த்து தேறலாம்
தற்காலிக முனிவராய் அனைவரும் ஆகலாம்
விலையில்லா நிம்மதியை வீட்டுக்கெடுத்து போகலாம்

Friday 1 July 2011

தரிசனம்

புலர்கின்ற காலை பூங்கா நிறுத்தம்
மின்சார ரயில் மிதமான கூட்டம்
புதிதாய் காதல் செய்வோர் பொய்கள் பேசிட
அவரினும் சிறியோர் ஆர்வமாய் பார்த்திட
வயதால் தெளிந்தோர் மௌனம் காத்திட
அண்டி வந்த அனைவரையும் ஏற்றி
வண்டி நகர்ந்தது  புகலிடம் நோக்கி;


Monday 27 June 2011

மீந்த சொல்

சொல்ல சொல்லி அறிமுகம் ஆகும் சொல்
சொல்லின் பொருளே சொல்லாய் ஆன சொல்

உயிரை ஊனில் வரையும் ஒரு சொல்
பயிராய் விதையில் மறையும் ஒரு சொல்

இடுப்பில் இருத்தி இதயம் பார்த்த சொல்
இளமை வரையில் இமையை காத்த சொல்
மழை போல் மனதை ஈரம் ஆக்கும் சொல்
வயதால் வயதை மெதுவாய் நீர்க்கும் சொல்

இல்லறம் ஆயிடின் இரட்டிப்பாகும் சொல்
துறவறம் போயினும் துறக்க இயலாத சொல்
நல்லவை தன்னில் நாவை அடைக்கும் சொல்
அல்லவை தன்னை அன்பில் உடைக்கும் சொல்

நிகழ்கால வடிவம் நீங்கி போயினும்
பிரயோக படிவம் பழுதாய் ஆயினும்
அரண் போல் நம்மை ஆதரிக்கும் சொல்
பரண் மேல் இருக்கும் பத்திரமான சொல்

Thursday 19 May 2011

நாமாக விழைந்தோ  தற்செயலாய்   நம்மை அடைந்தோ விடும் நிகழ்வுகளில் தோய்ந்த நினைவுகளின் சேகரிப்பே வாழ்கையின் அடிநாதம்.  
அனுபவ சாளரங்களின் வழியே அவற்றை அர்த்தபடுத்தும் முயற்சியிலேயே கடந்து போகிறது அனைவரின் நிகழ்காலம். சொற்களின் வாகனத்தில் பயணம் போகையில் சாத்தியபடுகிறது இத்தகைய  காலத்தின் தரிசனம். இயற்கையின் படிமங்களை மறைமுக உவமைகளாய் இழைத்து நாம் கடக்கின்ற நொடிகளின் உணர்வுகளை காலத்தில் நெய்த எண்ணங்களாய் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்த கவிதைத்தொகுப்பு.

கி. குமரன்

மே 2011 வெளியீடு