Thursday 19 January 2012

வயதின் சுவை...

நாற்பது அருகில் வந்தாச்சு நல்லது கெட்டது  புரிஞ்சாச்சு
உலகின் நிறங்கள் தெளிவாச்சு உறவும் பிரிவும் இயல்பாச்சு
தாயைத் தீயில் இட்டாச்சு தவிப்பு நிறைய பட்டாச்சு
வலிகளில் வலிமை சேர்த்தாச்சு வழிபோக்கர்கள் பார்த்தாச்சு
தாரம் தாய்போல் ஆயாச்சு பாரம் பகிரும் தோளாச்சு
ஒவ்வொரு நாளும் பிறப்பாச்சு செயல்கள் மேலும் சிறப்பாச்சு
அன்பு இன்னும் அழகாச்சு அறிவின் தேடல் விரிவாச்சு
பார்வைகள் பலவும் புதுசாச்சு பழையவை அவற்றின் விழுதாச்சு
மனதை நன்றாய் உழுதாச்சு மலர்கள் மட்டும் பயிராச்சு
நடுத்தர வயதின் முழுவீச்சு நாற்பதில் தெரியும் எனப்பேச்சு
காலம் ஊன்றுகோல் போலானால் கவலைகள் எல்லாம் கால்தூசு.







Monday 9 January 2012

புகார்*

நதியில் குளித்தால் நம் கர்மம் கழியுமென்று
முழுதாய் முங்குதல் அவ்வளவு எளிதன்று;
ஆழம் பார்க்கும் நோக்கில்  வைத்தேன் கால்கள்
அழுக்கெடுக்கும் போக்கில்  கடித்தன மீன்கள்
உதறவும் மனமின்றி ஊன்றிடும் குணமின்றி
அரைகுறையாய் போடுகிறேன் நீரில் முழுக்கு
ஆங்காங்கே கரைகிறது ஆயுள் அழுக்கு
நதியில் முகத்துவாரத்தில் நகைக்கிறது காலம்
நம்பித் தொடர்கிறேன் நானும் அதை நாளும்...


*ஆறு கடலில் கலக்குமிடம்.