Thursday 20 September 2012

கடைசி குருவி...


நம் வீட்டில் தன் கூட்டை நாமறியாது கட்டி
அன்றாடம் நம்மோடு தன் வாழ்வை ஒட்டி
வருடக்கணக்கில் வசித்த‌ நம்மூர் குருவி
எப்படித்தான் போனது எங்கேயோ விலகி?

ந‌ம் வீட்டு முற்றத்தில் எஞ்சிய பருக்கைகளை
நன்கறிந்து பறந்து வந்து கொஞ்சிக் குறுமொழியில்
கொத்திச் செல்லும் குருவியை வஞ்சித்த‌ பாவமெல்லாம்
நம்மையே சேரும் வருங்காலம் தோறும்...

அறைக்குள் பறக்குமென்று மின்விசிறி நிறுத்தி
கதவிடையே இருந்தால் கண்களை உறுத்தி
அடிபட்டால் அதன் மேல் அன்பினை காட்டி
தேங்காய் ஒட்டில் நீர்வைத்து ஊட்டி
பறவையிடம் கூட பழகினோம் அன்று
சுயநலம் பிடித்து அழுகினோம் இன்று

அலைபேசி கோபுரங்கள் அதிகளவில் நிறுவி
ஆளுக்கொரு கத்தியை அதன் முதுகில் சொருகி
கொலை செய்த நமது ஊரை விட்டு விலகி
"மதியாதார் தலைவாசல்" அர்த்தத்தை பருகி
மறைந்தே போனது மானமுள்ள குருவி!

Friday 14 September 2012

நம் வீட்டின் வரைபடம்...


சாம்ராஜ்ஜிய மன்னரோ சாதாரண மனிதரோ
இருந்த கால நினைவுகளே இருவரின் சரித்திரமாம்
நம் நினைவை நட்டுச் செல்ல‌
பிறர் நினைவை தொட்டுக் கொள்ள‌
நாலு சுவர் நடுவினிலே
கட்டி வைத்த அறைகளிலே
காற்றினிலே கலந்திருக்கும்
காலத்தின் நாட்குறிப்பு.

வாடகை வீட்டில் வசிப்போர்க்கும்
வசித்த வீட்டை விற்போர்க்கும்
வரைபடம் வைத்துக் கொள்ள‌
வசதியான வழிகள் உண்டு
இதுவரை இருந்த வீட்டில்
இயல்பாகச் சேர்த்த நினைவை
அளவாக மனதில் அள்ளி
செல்லும் இடம் சேர்த்திடுவீர்

சொந்த வீடு வைத்திருப்போர்
சந்தை லாபம் பாராமல்
சற்று நேரம் யோசித்தால்
விற்கும் விருப்பம் விலகிவிடும்
மூதாதையர் வாழ்ந்த வீட்டை
முடிந்தவரை விற்காதீர்
திதி செய்தால் தீர்ந்ததென்று
திருப்தி என்றும் கொள்ளாதீர்

ஆண்டு பல கடந்தாலும்
மீண்டு வர இயலாத‌
நீண்ட ஒரு நித்திரையில்
மாண்ட பல மனிதர்கள்
வாழ்ந்து சென்ற வீடுகளில்
காலம் வேய்ந்த கூடுகளில்
அன்று தந்த ஞாபகங்கள்
இன்றும் வந்து குடியிருக்கும்.