Sunday 21 December 2014

இப்படியும் ஒரு காலண்டர்!

கடவுள் முகங்கள் காடுகள் மலைகள்
நடிகை நதி நாய்குட்டி முயலென‌
விதவிதமாய் வகைவகையாய்
படங்களுடன் நாட்காட்டி
வரும் ஆண்டை வரவேற்க...

ஆண்டுகள் பிறக்கும் மாதங்கள் கடக்கும்
நாட்கள் சில மட்டும் ஞாபகம் இருக்கும் ‍
தேதியை கிழிக்கையில் கைக்குள் கசங்கலாய்
நெருங்கி இருந்து நீத்துப் போனோரின்
நினைவின் மிச்சம் வாழ்வின் எச்சம்
கால‌ண்டர் கோட்பாடு
காலத்தின் ஏற்பாடு.

Saturday 26 July 2014

உயிர் சாலை...

என்றோ உடனிருந்து
மனம் கனக்க மறைந்து போன‌
எவருடைய நினைவையோ
அவரவருக்கு அளித்தபடி
அலறி விரையும் ஆம்புலன்ஸ்

உள்ளே உள்ள உருவம்
உயிர் பிழைக்க வேண்டுகிறது
ஒரு நொடி நினைப்புடன்
கடக்கின்ற அனைவருக்குள்ளும்
மீதம் இருக்கிற‌ மனிதம்!

Sunday 12 January 2014

கடிகாரம்


இன்றேனும் ஏதேனும் ஒன்று
நன்றேனும் செய்தோமா என்று
சுற்றி வந்து நம்மை
உற்றுப் பார்க்கிறது காலம்.

நினைவு சிறு முள்
வயது பெரு முள்
வாழ்க்கையின் உள்
காலத்தின் சொல்.

பின்னோக்கி நகராதா என‌
ஏங்க வைக்கும் முட்கள்
எல்லா கடிகாரத்தின்
உள்ளேயும் உண்டு

எத்தனை கோடி கரங்கள்
எத்தனை கோடி ரகங்கள்
இரண்டே முள்
ஒரே காலம்?

முள் நொடி அசைவதற்குள்
முடிந்து விடும் மூச்சடைத்து
வருடக்கணக்கில் வட்டமிடும்
நம் இருப்பு எதன் பொருட்டு?

Sunday 27 October 2013

காலத்தின் கணக்கு

நேற்றாலே வாழ்கிறேன்
நேற்றில் நான் வாழ்கிறேன்...
முழுமையற்று கடந்தாலும்
முட்கள் சில இருந்தாலும்
கடந்து வந்தவையாலும்
கழிந்து போனவையாலும்
இன்று மீதேறி நின்று
நேற்றை பார்த்து வாழ்கிறேன்...
நாளை வரும் நாளும் கூட‌
நாளையின் மறு தினத்தில்
நேற்று என்று ஆவதே
நேர விதி ஆனதால்
நேற்றிலேயே வாழ்கிறேன்
நேற்றாகவே ஆகிறேன்...

Sunday 14 July 2013

மழைச் செய்தி

வான்நீர் சொரியும் பொழுதில்
தேநீர் அருந்திக் கொண்டே
மழையிலே மனம் லயித்தால்
களைப்பெல்லாம் கரைந்து போகும்

மின்னல் கண்ணைத் தாக்கும் என்று
ஜன்னல் கதவைச் சாத்தாதீர்
தொலைதூரம் பயணம் செய்து
நம்மைப் பார்க்க வரும் மழைக்கு
வழி காட்டி ஒளி ஊட்டும்
விழிகளே மின்னலாகும்

இளையவரோ முதியவரோ
இருபாலர் பிரிவினரோ
இன்றைய வாழ்க்கை முறையில்
இரவிலே உறக்கமில்லை
விளக்குகள் அணைத்து விட்டு
வீதியில் விழும் மழையின்
துளிகளின் இசை ரசித்தால்
துயில் நம்மைத் துரத்தி வரும்

Sunday 28 April 2013

கடலும் காலமும்...


அழகான அமைதியுடன்
ஆர்ப்பரிக்கும் கடலருகில்
நனையாமல் நிற்பதில்
நமக்கென்ன சுகமென்று
ஆசைகள் கொண்டு
ஆயத்தம் செய்து
அனைவரும் கடல்தரும்
அனுபவம் பெறுவதுண்டு.

அலை சேரும் இடமெல்லாம்
மணல் சேர்தல் சகஜமென்று
விரலிடுக்கில் ஒட்டியதை
வீடுவந்து கழுவினாலும்
நனைந்து காய்ந்த நமக்குள்ளே
எப்போதும் கடலிருக்கும் -
கடல் விரும்பும் நேரத்திலே
அது நம்மை வரவழைக்கும்.

Saturday 23 March 2013

வனப்பிரஸ்தம்...


அறிந்தவைகளில் ஆசை வைத்து
ஆசைகளில் நியாயப்படுத்தி
நியாயங்களை அர்த்தப்படுத்தி
அர்த்தங்களை மகிழ்ச்சியாக்கி
மகிழ்ச்சியை மையமாக்கி
மையத்தை மனதில் வைத்து
வையத்தில் வாழ்வதையே
உய்வதற்கான வழிகள் என்று
நெய்யப்படுகிறது நேர்த்தியின்றி
வாழ்வியல் விதிமுறைகள்;
விதிமுறை பற்றிய கேள்விகளை
மதிமுழுதும் வீசியபடி
முன்னறிவிப்பு ஏதுமின்றி
முன்செல்கிறது காலம்
முதுமையை முகர்ந்தபடி...