குப்பனோ சுப்பனோ குபேரனுக்கு அப்பனோ
பள்ளிக்குப் போகாத பாமரனோ
பட்டங்கள் பெற்ற நாவலனோ
அப்பழுக்கற்றவனோ அற ஒழுக்கமற்றவனோ
எவனாய் ஆயினும் எங்கே போயினும்
எதிர்கொள்ளும் நிகழ்வு பல
ஏனென்ற கேள்வி தரும்.
பிறிதொரு பொழுதிலோ பின்னொரு நிகழ்விலோ
அதன் பதில் ஆழமாய் அடிமனதில் இறங்கி விடும்
கத்தியால் சொருகினாற்போல் புத்திக்கு விளங்கி விடும்
அனுபவச் செறிவோ ஆன்மீக விரிவோ
ஒன்று மூலம் மற்றொன்றில் ஓரளவு தேர்ச்சி வரும்
நன்று தீது எல்லாமும் நாளடைவில் நீர்த்து விடும்
கடவுளின் பள்ளியில் காலமெனும் ஆசிரியர்
வயதின் வகுப்புகளில் வந்தெடுக்கும் பாடங்களில்
வயதின் வகுப்புகளில் வந்தெடுக்கும் பாடங்களில்
சமச்சீர் கல்வி சற்றேனும் சாத்தியமே!