Saturday, 6 October 2012

மழையோடு மழையாகி...


நம் நினைவு புத்தகத்தை
தன் நெடிய கரங்களினால்
வருடிப் பார்க்கும் வானத்திற்கு
வசதியான விரல்கள் மழை.

வானம் தெளிக்கும் நீரை எடுத்து
தேகம் முழுக்கத் தேடிப் பிடித்து
என்றோ சேர்த்த ஏதோ நினைவை
எப்படி எடுக்கிறது மழை?

நேரம் சற்று மறந்து
சாரல் மழையில் நடந்து
தேகம் நனைக்கத் தெரிந்து
பாரம் இறக்கப் பழகு.

மழையை ரசிக்கும்
மருத்துவம் படித்தால்
மனதின் நோய்கள்
மழையால் நீங்கும்.

Thursday, 20 September 2012

கடைசி குருவி...


நம் வீட்டில் தன் கூட்டை நாமறியாது கட்டி
அன்றாடம் நம்மோடு தன் வாழ்வை ஒட்டி
வருடக்கணக்கில் வசித்த‌ நம்மூர் குருவி
எப்படித்தான் போனது எங்கேயோ விலகி?

ந‌ம் வீட்டு முற்றத்தில் எஞ்சிய பருக்கைகளை
நன்கறிந்து பறந்து வந்து கொஞ்சிக் குறுமொழியில்
கொத்திச் செல்லும் குருவியை வஞ்சித்த‌ பாவமெல்லாம்
நம்மையே சேரும் வருங்காலம் தோறும்...

அறைக்குள் பறக்குமென்று மின்விசிறி நிறுத்தி
கதவிடையே இருந்தால் கண்களை உறுத்தி
அடிபட்டால் அதன் மேல் அன்பினை காட்டி
தேங்காய் ஒட்டில் நீர்வைத்து ஊட்டி
பறவையிடம் கூட பழகினோம் அன்று
சுயநலம் பிடித்து அழுகினோம் இன்று

அலைபேசி கோபுரங்கள் அதிகளவில் நிறுவி
ஆளுக்கொரு கத்தியை அதன் முதுகில் சொருகி
கொலை செய்த நமது ஊரை விட்டு விலகி
"மதியாதார் தலைவாசல்" அர்த்தத்தை பருகி
மறைந்தே போனது மானமுள்ள குருவி!

Friday, 14 September 2012

நம் வீட்டின் வரைபடம்...


சாம்ராஜ்ஜிய மன்னரோ சாதாரண மனிதரோ
இருந்த கால நினைவுகளே இருவரின் சரித்திரமாம்
நம் நினைவை நட்டுச் செல்ல‌
பிறர் நினைவை தொட்டுக் கொள்ள‌
நாலு சுவர் நடுவினிலே
கட்டி வைத்த அறைகளிலே
காற்றினிலே கலந்திருக்கும்
காலத்தின் நாட்குறிப்பு.

வாடகை வீட்டில் வசிப்போர்க்கும்
வசித்த வீட்டை விற்போர்க்கும்
வரைபடம் வைத்துக் கொள்ள‌
வசதியான வழிகள் உண்டு
இதுவரை இருந்த வீட்டில்
இயல்பாகச் சேர்த்த நினைவை
அளவாக மனதில் அள்ளி
செல்லும் இடம் சேர்த்திடுவீர்

சொந்த வீடு வைத்திருப்போர்
சந்தை லாபம் பாராமல்
சற்று நேரம் யோசித்தால்
விற்கும் விருப்பம் விலகிவிடும்
மூதாதையர் வாழ்ந்த வீட்டை
முடிந்தவரை விற்காதீர்
திதி செய்தால் தீர்ந்ததென்று
திருப்தி என்றும் கொள்ளாதீர்

ஆண்டு பல கடந்தாலும்
மீண்டு வர இயலாத‌
நீண்ட ஒரு நித்திரையில்
மாண்ட பல மனிதர்கள்
வாழ்ந்து சென்ற வீடுகளில்
காலம் வேய்ந்த கூடுகளில்
அன்று தந்த ஞாபகங்கள்
இன்றும் வந்து குடியிருக்கும்.

Thursday, 30 August 2012

நேற்றிருந்த மரம்...

நீ நின்ற‌ இடத்தில் நான் இன்று இருக்கையில்
வெயிலில் சுடுகிறது நினைவின் நிழல்;
இயந்திரம் உந்தன் சிறகுகள் முறிக்கையில்,
அடிவரை அறுத்து உன் உயிர் குடிக்கையில்,
வெட்டப்படும் வேர்கள் உதவிக்கு அழைக்கையில்,
முன்னேற்றத்தின் முக்காடுக்குள்
ஒளிந்து கொண்டேன் நான்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கற்பனை அல்ல கட்டாயம் நிகழும்
மழை மெல்ல மண்ணை விட்டு தூரமாக போகிறது
புத்தி கெட்ட நமக்கு இது புரியவா போகிறது?

Monday, 13 August 2012

சுதந்திர கோமாளிகள்


ஆண்டு தோறும் சுதந்திர தினம் வரும்
அனைவருக்கும்  அது விடுமுறை தரும்
சற்று ஓய்வு பெற்றிட உற்சாகமாய் சுற்றிட‌
உபயோகமாய் உள்ளதாய் ஊரெல்லாம் சொல்கிறோம்;

தனிமனித ஒழுக்கமும் தார்மீக நேர்மையும்
தவிட்டுக்கும் உதவாது என்று பார்த்து விட்டோம்;
சமூக அக்கறை கொண்டவர் பெயர்களை
பிழைக்கத் தெரியாதோர் பட்டியலில் சேர்த்து விட்டோம்;

ஒட்டாத உணவுகள் ஒவ்வாத‌ பண்புகள்
மேற்கை பார்த்து மேம்போக்காய் தின்றோம்
முன்னேற்றம் என்ற போர்வைக்குள்ளே
உணர்வுகள் உறவுகள் இரண்டையும் கொன்றோம்.

ஊழலில் திளைப்போர் உயரத்தில் வாழ்வதும்
உண்மை மனங்கள் உருக்குலைந்து வீழ்வதும்
வீட்டிலும் நாட்டிலும் நடக்கின்ற ஒன்று
சுதந்திர நாட்டின் சூத்திரம் நன்று.

வீதியில் விற்கும் தேசிய கொடியை
வாகனத்தில் வாங்கி வைப்பது எதற்கு?
அன்றாட வாழ்வின் ஆயிரம் செயல்களில்
நாட்டைப் பற்றிய நினைப்புண்டோ நமக்கு?
சாக்கடை போல நாறுது நாடு - நமக்கு
சுதந்திர(ம்) தினம் மகிழ்ந்து கூத்தாடு!.


Tuesday, 24 July 2012

காடு - ஒரு அறிமுகம்


காட்டின் விடியல் காண்கின்ற விழியும்
மனதுக்குள்ளே அது பாய்ச்சும் ஒளியும்
பறவைகள் தமக்குள் பேசுகின்ற மொழியும்
காலாற நடக்கையில் காற்று வீசும் ஒலியும்
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தின் துளியும்
மகிழ்ச்சியின் சாறாய் நம்மீது வழியும்.

புற்களின் அசைவிலும் உற்சாகம் இருக்கும்
சொற்களை மீறிய அர்த்தங்கள் கொடுக்கும்
வனத்தின் வசீகரம் நம் வயதை குறைக்கும்
சுத்தமான காற்று நுரையீரல் நிறைக்கும்
நகரத்து வாழ்வின் அச்சாணி முறியும்
இயற்கை என்பதன் உச்சாணி புரியும்

Sunday, 1 July 2012

ஒரு சொல்

பல காலம் சொல்லிப் பழகிய சொல்லின்
வாழ்வாலும் வயதாலும் பதிவாகும் ஒன்றின்
உச்ச‌ரிப்பின் உயிர் போன சடலமாக‌
உயிர் தந்த சொல்லின் உருவ‌ம் மாற‌
சொல்லின் எழுத்துக்களை சுடுகாட்டில் குவித்து
அதனோடு அச்சொல்லின் அர்த்தங்களை அவித்து
பொருளின் வடிவத்தை சிதையிலே தள்ளி
நாக்கினால் சொல்லுக்கு வைத்தாயிற்று கொள்ளி
வேகாத‌ சொல்லை சாம்ப‌லாய் அள்ளி
நினைவின் கோலத்தில் நிரந்தரப் புள்ளி.