Friday, 14 September 2012

நம் வீட்டின் வரைபடம்...


சாம்ராஜ்ஜிய மன்னரோ சாதாரண மனிதரோ
இருந்த கால நினைவுகளே இருவரின் சரித்திரமாம்
நம் நினைவை நட்டுச் செல்ல‌
பிறர் நினைவை தொட்டுக் கொள்ள‌
நாலு சுவர் நடுவினிலே
கட்டி வைத்த அறைகளிலே
காற்றினிலே கலந்திருக்கும்
காலத்தின் நாட்குறிப்பு.

வாடகை வீட்டில் வசிப்போர்க்கும்
வசித்த வீட்டை விற்போர்க்கும்
வரைபடம் வைத்துக் கொள்ள‌
வசதியான வழிகள் உண்டு
இதுவரை இருந்த வீட்டில்
இயல்பாகச் சேர்த்த நினைவை
அளவாக மனதில் அள்ளி
செல்லும் இடம் சேர்த்திடுவீர்

சொந்த வீடு வைத்திருப்போர்
சந்தை லாபம் பாராமல்
சற்று நேரம் யோசித்தால்
விற்கும் விருப்பம் விலகிவிடும்
மூதாதையர் வாழ்ந்த வீட்டை
முடிந்தவரை விற்காதீர்
திதி செய்தால் தீர்ந்ததென்று
திருப்தி என்றும் கொள்ளாதீர்

ஆண்டு பல கடந்தாலும்
மீண்டு வர இயலாத‌
நீண்ட ஒரு நித்திரையில்
மாண்ட பல மனிதர்கள்
வாழ்ந்து சென்ற வீடுகளில்
காலம் வேய்ந்த கூடுகளில்
அன்று தந்த ஞாபகங்கள்
இன்றும் வந்து குடியிருக்கும்.

3 comments:

  1. உண்மைகளை உணர வைக்கும் வரிகள்...

    ReplyDelete
  2. காலத்தின் நாட்குறிப்பேடெனக் கைகாட்டிய பரம்பரை வீட்டை நினைக்கையில் கல் மண்ணோடு, கட்டிய பாட்டனின் பாசமும் கண்ணுக்குத் தெரிகிறதே... அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete