Sunday, 21 December 2014

இப்படியும் ஒரு காலண்டர்!

கடவுள் முகங்கள் காடுகள் மலைகள்
நடிகை நதி நாய்குட்டி முயலென‌
விதவிதமாய் வகைவகையாய்
படங்களுடன் நாட்காட்டி
வரும் ஆண்டை வரவேற்க...

ஆண்டுகள் பிறக்கும் மாதங்கள் கடக்கும்
நாட்கள் சில மட்டும் ஞாபகம் இருக்கும் ‍
தேதியை கிழிக்கையில் கைக்குள் கசங்கலாய்
நெருங்கி இருந்து நீத்துப் போனோரின்
நினைவின் மிச்சம் வாழ்வின் எச்சம்
கால‌ண்டர் கோட்பாடு
காலத்தின் ஏற்பாடு.

Saturday, 26 July 2014

உயிர் சாலை...

என்றோ உடனிருந்து
மனம் கனக்க மறைந்து போன‌
எவருடைய நினைவையோ
அவரவருக்கு அளித்தபடி
அலறி விரையும் ஆம்புலன்ஸ்

உள்ளே உள்ள உருவம்
உயிர் பிழைக்க வேண்டுகிறது
ஒரு நொடி நினைப்புடன்
கடக்கின்ற அனைவருக்குள்ளும்
மீதம் இருக்கிற‌ மனிதம்!

Sunday, 12 January 2014

கடிகாரம்


இன்றேனும் ஏதேனும் ஒன்று
நன்றேனும் செய்தோமா என்று
சுற்றி வந்து நம்மை
உற்றுப் பார்க்கிறது காலம்.

நினைவு சிறு முள்
வயது பெரு முள்
வாழ்க்கையின் உள்
காலத்தின் சொல்.

பின்னோக்கி நகராதா என‌
ஏங்க வைக்கும் முட்கள்
எல்லா கடிகாரத்தின்
உள்ளேயும் உண்டு

எத்தனை கோடி கரங்கள்
எத்தனை கோடி ரகங்கள்
இரண்டே முள்
ஒரே காலம்?

முள் நொடி அசைவதற்குள்
முடிந்து விடும் மூச்சடைத்து
வருடக்கணக்கில் வட்டமிடும்
நம் இருப்பு எதன் பொருட்டு?

Sunday, 27 October 2013

காலத்தின் கணக்கு

நேற்றாலே வாழ்கிறேன்
நேற்றில் நான் வாழ்கிறேன்...
முழுமையற்று கடந்தாலும்
முட்கள் சில இருந்தாலும்
கடந்து வந்தவையாலும்
கழிந்து போனவையாலும்
இன்று மீதேறி நின்று
நேற்றை பார்த்து வாழ்கிறேன்...
நாளை வரும் நாளும் கூட‌
நாளையின் மறு தினத்தில்
நேற்று என்று ஆவதே
நேர விதி ஆனதால்
நேற்றிலேயே வாழ்கிறேன்
நேற்றாகவே ஆகிறேன்...

Sunday, 14 July 2013

மழைச் செய்தி

வான்நீர் சொரியும் பொழுதில்
தேநீர் அருந்திக் கொண்டே
மழையிலே மனம் லயித்தால்
களைப்பெல்லாம் கரைந்து போகும்

மின்னல் கண்ணைத் தாக்கும் என்று
ஜன்னல் கதவைச் சாத்தாதீர்
தொலைதூரம் பயணம் செய்து
நம்மைப் பார்க்க வரும் மழைக்கு
வழி காட்டி ஒளி ஊட்டும்
விழிகளே மின்னலாகும்

இளையவரோ முதியவரோ
இருபாலர் பிரிவினரோ
இன்றைய வாழ்க்கை முறையில்
இரவிலே உறக்கமில்லை
விளக்குகள் அணைத்து விட்டு
வீதியில் விழும் மழையின்
துளிகளின் இசை ரசித்தால்
துயில் நம்மைத் துரத்தி வரும்

Sunday, 28 April 2013

கடலும் காலமும்...


அழகான அமைதியுடன்
ஆர்ப்பரிக்கும் கடலருகில்
நனையாமல் நிற்பதில்
நமக்கென்ன சுகமென்று
ஆசைகள் கொண்டு
ஆயத்தம் செய்து
அனைவரும் கடல்தரும்
அனுபவம் பெறுவதுண்டு.

அலை சேரும் இடமெல்லாம்
மணல் சேர்தல் சகஜமென்று
விரலிடுக்கில் ஒட்டியதை
வீடுவந்து கழுவினாலும்
நனைந்து காய்ந்த நமக்குள்ளே
எப்போதும் கடலிருக்கும் -
கடல் விரும்பும் நேரத்திலே
அது நம்மை வரவழைக்கும்.

Saturday, 23 March 2013

வனப்பிரஸ்தம்...


அறிந்தவைகளில் ஆசை வைத்து
ஆசைகளில் நியாயப்படுத்தி
நியாயங்களை அர்த்தப்படுத்தி
அர்த்தங்களை மகிழ்ச்சியாக்கி
மகிழ்ச்சியை மையமாக்கி
மையத்தை மனதில் வைத்து
வையத்தில் வாழ்வதையே
உய்வதற்கான வழிகள் என்று
நெய்யப்படுகிறது நேர்த்தியின்றி
வாழ்வியல் விதிமுறைகள்;
விதிமுறை பற்றிய கேள்விகளை
மதிமுழுதும் வீசியபடி
முன்னறிவிப்பு ஏதுமின்றி
முன்செல்கிறது காலம்
முதுமையை முகர்ந்தபடி...

Saturday, 16 February 2013

இலை மறை காய்...


அசைந்த மரம்
இசைந்த இலை
உதிர்தலில் உள்ளது
உறவும் பிரிவும்.

ஒரு சருகின் இருப்பை
உள்ளடக்கி உருவாவதே
ஓரு விதையின் கோட்பாடு.

பெருவெள்ளம் அடித்துச் செல்லும்
இலையில் தத்தளிப்பது
மரத்தின் நினைவு.

எத்தனை மரங்கள்
எத்தனை இலைகள்
இலைகள் அறியுமா
விதையின் கதை?

Friday, 25 January 2013

மலையேற்றம்

முந்தைய காலம் தொட்டு முகாந்திரம் ஏதுமின்றி
மந்தையாய் ஒரு கூட்டம் மலையேறி மாய்கிறது
அடிவாரத்தில் வசதிகள் அருகாமை என்பதனால்
ஆகாய விசாலம் அறிந்திட அவதானமில்லை;
மெய்யுணர்வின் பாதையொன்றே
மேலேறும் வழி எனவே
பிணைந்திருக்கும் பொருளெதுவும்
பின்தொடர்ந்து வருவதில்லை;
கண்களின் விரிவோ
காட்சியின் செறிவோ
காலத்தின் பரிவோ
காயத்தின் முதிர்வோ
சிலதால்...சிலதாய்...சிகரம்.

Sunday, 13 January 2013

பொங்கலுக்கேற்ற அல்வா...


ஆறுகளில் தண்ணியில்லை ஊற்று ஊற மண்ணுமில்லை
பக்கத்தில் உள்ளோருக்கு பகிர்ந்திடும் எண்ணமில்லை
பக்குவமாய் பேசித் தீர்க்க பெரியோர்கள் இங்குமில்லை
பகல்கொள்ளை அடிக்கும் கட்சிகளுக்கு பஞ்சமில்லை
வர்க்கபேதம் வளர்க்கும் வன்முறைகள் கொஞ்சமில்லை
ஒவ்வொரு துறையிலும் நிர்வாக சீர்கேடு
தனிமனித ஒழுக்கமோ படுது பெரும்பாடு
ஒய்யார கொண்டைக்குள் ஒராயிரம் புழுக்கூடு
இப்படித்தான் இருக்குது நம் தமிழ்நாடு
இத்தனை அல்வா நமக்கென இருக்கு
பொங்கலும் கரும்பும் தனியே எதற்கு?

Saturday, 22 December 2012

கால ஞானம்


இன்று என்பது நாளையின் நேற்று
இவற்றின் தொகுப்பே காலத்தின் ஊற்று
இடையே இயங்குது நம் மூச்சுக் காற்று
இப்பொழுதும் எப்பொழுதும் இதற்கில்லை மாற்று;

ஒவ்வொரு நொடியையும் அதன்வழி பார்த்து
வருகின்ற அனுபவம் வயதுடன் சேர்த்து
கடக்கின்ற அனைத்தையும் காலத்தில் கோர்த்து
காலத்தின் வழியே கடவுளை நோக்கு.

Sunday, 2 December 2012

மழை நோய் மருத்துவம்...


உச்சரித்து உச்சரித்து உதடுகளில் ஊற வைத்து
நாவினிலே நனைத்தெடுத்து நரம்புகளுக்கு அனுப்பி வைத்து
உதிரத்தில் கரைந்து உயிருக்குள் பரவும்
மழையை சாப்பிட்டால் மனம் பெறும் தித்திப்பால்
ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுமா என்று
மருத்தவரிடம் கேட்டேன் மழையின் ருசியை...
மனநோயா உனக்கென மருத்துவர் கேட்டார்
மழை நோய் எனக்கென மறுமொழி சொன்னேன்.

பசி மிக அதிகம் எடுக்கிறது
பகலிலும் சோர்வு கொடுக்கிறது
வியர்வை அதிகம் வழிகிறது
வீணாய் கோபம் வருகிறது
உழைப்பின் வேகம் குறைகிறது
உணர்வும் களைப்பு பெறுகிறது
மழை பெய்ய மறுக்கும் பொழுதுகளில்
மனம் மிக அடையும் பழுதுகளால்
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சாத்தியம் என்று நினைப்பதனால்
சந்தேகம் வந்தது என்று சொன்னேன்
சங்கடத்தில் அவர் நெளிந்தார்...

மாத்திரை ஏதும் இல்லையென்றும் - மழை
யாத்திரை போவதே நல்லதென்றும் - தினம்
மழைக்காக மருகிடும் மனம்
மனிதருக்கெங்கே புரிந்திடும்?

Sunday, 18 November 2012

புத்தகம் படிப்பது எப்படி?


காகித வாசனை நேசி
கருத்தை நன்றாய் வாசி
பிடித்தமோ இல்லையோ யோசி
நல்லதை மனதுடன் பேசி
அல்லதை குப்பையில் வீசி
வடிகட்டி வாழ்க்கையில் பூசி
கழுவலாம் ஜென்மத்து பாசி
புத்தகம் நெஞ்சுக்கு ஊசி
பிறகெதற்கு போகணும் காசி?


Saturday, 3 November 2012

மழை பெய்த இரவு...


அன்பு என்ற ஒன்றை மட்டும்
அகிலம் முழுதும் அளிக்கும் மழை
அனைவரின் வீட்டிற்குள்ளும்
அவ்வப்பொழுது வர முயலும்;

விருந்தாளியை உபசரிக்க‌
விரும்பாத நம் குணத்தால்
கதவடைத்து வைத்தாலும்
கனிவுடன் காத்து நிற்கும்
அழகான குரலாலே
அனுமதி கேட்டு நிற்கும்;

மறுக்கின்ற பொழுதெல்லாம்
மனமுடைந்து மண்ணில் சாயும்
உறவாட வந்த மழை
இரவெல்லாம் அழுதபடி
சாலையில் தேங்கி நிற்கும்
காலையேனும் நம்மை பார்க்க...

Saturday, 20 October 2012

வாழ்க்கையின் சாலை...

ஆங்காங்கே தென்படும் மகிழ்ச்சி
அதனிடை துன்பத்தின் அதிர்ச்சி
இரண்டையும் பழகிட பயிற்சி
இடையிலே பரவிடும் அயற்சி
இவற்றினைப் படிப்பதே வளர்ச்சி
மனதுக்குள் பக்குவ மலர்ச்சி
அனைத்திலும் அனுபவ திரட்சி
இதுவே வாழ்க்கையின் கவர்ச்சி
இறுதியில் வருவது முதிர்ச்சி
புரிந்திடும் காலத்தின் சுழற்சி.


Saturday, 6 October 2012

மழையோடு மழையாகி...


நம் நினைவு புத்தகத்தை
தன் நெடிய கரங்களினால்
வருடிப் பார்க்கும் வானத்திற்கு
வசதியான விரல்கள் மழை.

வானம் தெளிக்கும் நீரை எடுத்து
தேகம் முழுக்கத் தேடிப் பிடித்து
என்றோ சேர்த்த ஏதோ நினைவை
எப்படி எடுக்கிறது மழை?

நேரம் சற்று மறந்து
சாரல் மழையில் நடந்து
தேகம் நனைக்கத் தெரிந்து
பாரம் இறக்கப் பழகு.

மழையை ரசிக்கும்
மருத்துவம் படித்தால்
மனதின் நோய்கள்
மழையால் நீங்கும்.

Thursday, 20 September 2012

கடைசி குருவி...


நம் வீட்டில் தன் கூட்டை நாமறியாது கட்டி
அன்றாடம் நம்மோடு தன் வாழ்வை ஒட்டி
வருடக்கணக்கில் வசித்த‌ நம்மூர் குருவி
எப்படித்தான் போனது எங்கேயோ விலகி?

ந‌ம் வீட்டு முற்றத்தில் எஞ்சிய பருக்கைகளை
நன்கறிந்து பறந்து வந்து கொஞ்சிக் குறுமொழியில்
கொத்திச் செல்லும் குருவியை வஞ்சித்த‌ பாவமெல்லாம்
நம்மையே சேரும் வருங்காலம் தோறும்...

அறைக்குள் பறக்குமென்று மின்விசிறி நிறுத்தி
கதவிடையே இருந்தால் கண்களை உறுத்தி
அடிபட்டால் அதன் மேல் அன்பினை காட்டி
தேங்காய் ஒட்டில் நீர்வைத்து ஊட்டி
பறவையிடம் கூட பழகினோம் அன்று
சுயநலம் பிடித்து அழுகினோம் இன்று

அலைபேசி கோபுரங்கள் அதிகளவில் நிறுவி
ஆளுக்கொரு கத்தியை அதன் முதுகில் சொருகி
கொலை செய்த நமது ஊரை விட்டு விலகி
"மதியாதார் தலைவாசல்" அர்த்தத்தை பருகி
மறைந்தே போனது மானமுள்ள குருவி!

Friday, 14 September 2012

நம் வீட்டின் வரைபடம்...


சாம்ராஜ்ஜிய மன்னரோ சாதாரண மனிதரோ
இருந்த கால நினைவுகளே இருவரின் சரித்திரமாம்
நம் நினைவை நட்டுச் செல்ல‌
பிறர் நினைவை தொட்டுக் கொள்ள‌
நாலு சுவர் நடுவினிலே
கட்டி வைத்த அறைகளிலே
காற்றினிலே கலந்திருக்கும்
காலத்தின் நாட்குறிப்பு.

வாடகை வீட்டில் வசிப்போர்க்கும்
வசித்த வீட்டை விற்போர்க்கும்
வரைபடம் வைத்துக் கொள்ள‌
வசதியான வழிகள் உண்டு
இதுவரை இருந்த வீட்டில்
இயல்பாகச் சேர்த்த நினைவை
அளவாக மனதில் அள்ளி
செல்லும் இடம் சேர்த்திடுவீர்

சொந்த வீடு வைத்திருப்போர்
சந்தை லாபம் பாராமல்
சற்று நேரம் யோசித்தால்
விற்கும் விருப்பம் விலகிவிடும்
மூதாதையர் வாழ்ந்த வீட்டை
முடிந்தவரை விற்காதீர்
திதி செய்தால் தீர்ந்ததென்று
திருப்தி என்றும் கொள்ளாதீர்

ஆண்டு பல கடந்தாலும்
மீண்டு வர இயலாத‌
நீண்ட ஒரு நித்திரையில்
மாண்ட பல மனிதர்கள்
வாழ்ந்து சென்ற வீடுகளில்
காலம் வேய்ந்த கூடுகளில்
அன்று தந்த ஞாபகங்கள்
இன்றும் வந்து குடியிருக்கும்.

Thursday, 30 August 2012

நேற்றிருந்த மரம்...

நீ நின்ற‌ இடத்தில் நான் இன்று இருக்கையில்
வெயிலில் சுடுகிறது நினைவின் நிழல்;
இயந்திரம் உந்தன் சிறகுகள் முறிக்கையில்,
அடிவரை அறுத்து உன் உயிர் குடிக்கையில்,
வெட்டப்படும் வேர்கள் உதவிக்கு அழைக்கையில்,
முன்னேற்றத்தின் முக்காடுக்குள்
ஒளிந்து கொண்டேன் நான்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கற்பனை அல்ல கட்டாயம் நிகழும்
மழை மெல்ல மண்ணை விட்டு தூரமாக போகிறது
புத்தி கெட்ட நமக்கு இது புரியவா போகிறது?

Monday, 13 August 2012

சுதந்திர கோமாளிகள்


ஆண்டு தோறும் சுதந்திர தினம் வரும்
அனைவருக்கும்  அது விடுமுறை தரும்
சற்று ஓய்வு பெற்றிட உற்சாகமாய் சுற்றிட‌
உபயோகமாய் உள்ளதாய் ஊரெல்லாம் சொல்கிறோம்;

தனிமனித ஒழுக்கமும் தார்மீக நேர்மையும்
தவிட்டுக்கும் உதவாது என்று பார்த்து விட்டோம்;
சமூக அக்கறை கொண்டவர் பெயர்களை
பிழைக்கத் தெரியாதோர் பட்டியலில் சேர்த்து விட்டோம்;

ஒட்டாத உணவுகள் ஒவ்வாத‌ பண்புகள்
மேற்கை பார்த்து மேம்போக்காய் தின்றோம்
முன்னேற்றம் என்ற போர்வைக்குள்ளே
உணர்வுகள் உறவுகள் இரண்டையும் கொன்றோம்.

ஊழலில் திளைப்போர் உயரத்தில் வாழ்வதும்
உண்மை மனங்கள் உருக்குலைந்து வீழ்வதும்
வீட்டிலும் நாட்டிலும் நடக்கின்ற ஒன்று
சுதந்திர நாட்டின் சூத்திரம் நன்று.

வீதியில் விற்கும் தேசிய கொடியை
வாகனத்தில் வாங்கி வைப்பது எதற்கு?
அன்றாட வாழ்வின் ஆயிரம் செயல்களில்
நாட்டைப் பற்றிய நினைப்புண்டோ நமக்கு?
சாக்கடை போல நாறுது நாடு - நமக்கு
சுதந்திர(ம்) தினம் மகிழ்ந்து கூத்தாடு!.