Wednesday, 13 June 2012

மழை விழும் பொழுது...

வீதியெங்கும் விரல் பதித்து
வட்ட வட்ட புள்ளி வைத்து
நீர்க் கோலம் போட்டபடி
ஊர் சுற்றும் மழை.

மேகங்களில் உறங்கி
வானத்தில் இறங்கி
கார் காலத் தேர் ஏறி
ஊர் வந்து சேர் மழை.

உடை நனையும் என்று நினைத்து
குடை விரித்து நாம் பிடித்தால்
மழைக்கு வருத்தம் வரும்
மண் மேல் புரண்டு அழும்.

மாபெரும் ம‌ழையின்
ஓரிரு துளிகள்
கையில் ஏந்திப் பார்
க‌ளிப்பில் நீந்திப் பார்.

Saturday, 2 June 2012

கடலின் காலடியில்...

தொடுவானில் சூரியன் கடலில் விழும் மாலை
காய்ச்சிய இரும்பாய் கடல் சிவக்கும் வேளை
பார்க்கின்ற அனைவருக்கும் காலத்தின் ஓலை
வாசிக்கத் தருவதே கடலுக்கு வேலை.


நினைவின் குமிழே நுரையாகும்
நினைக்க நினைக்க அலையாகும்
வருவதும் போவதும் கரையாகும்
வாழ்க்கை வடிவம் கடலாகும்.


கரையில் இருக்கும் கண்களுக்கு
மனதில் வலிக்கும் புண்களுக்கு
எளிதில் அமைதி ஏற்படுத்தும்
அலையின் மருந்து அற்புதமே!

தொட்டுப் போன‌ அலை - ந‌ம்மேல்
ஒட்டி வைக்கும் மணல் - அதில்
எட்டிப் பார்க்கும் கால‌ம் - கை
த‌ட்டிச் சிரிக்கும் க‌ட‌ல்.

Friday, 18 May 2012

முள் வேலி

பற்று வைத்த பலவும் வெற்று என அறிதல்
பெற்றெடுத்த தாயை பெருந் தீக்கிடுதல்
உற்சாகம் தராத வேலையில் உழைத்தல் 
கடந்ததை நினைத்தே காலத்தை கழித்தல்
அடுத்தவர் உணர்வை அடிவேரில் சிதைத்தல்
காலத்தின் வீச்சில் கனவுகள் தொலைத்தல்
அன்பை மிதிக்கும் அவமதிப்பு பொறுத்தல்
பாசாங்கு செய்வோரை பயன்கருதி சேர்(த்)தல்
நம்பிய உறவுகளின் நாடகம் வெளுத்தல்
வயது போனபின் வாழ்க்கை புரிதல்
வயோதிகத்தின் நிழலில் தனிமை சுடுதல்
இறுதிவரை எதிலும் தெளிவின்றி வாழ்தல்
இருப்பதில் விருப்பம் இறக்கையில் மிகுதல்  
இருந்ததன் சுமையுடன் கங்கையில் கரைதல்







Sunday, 6 May 2012

தேரோட்டம்

ஆண்டவன் பெயரைச் சொல்லி ஆசை வந்த காரணத்தால்
ஆயிரம் தேரோட்டம் ஆண்டு தோறும் நடக்கிறது
கொண்டாட்டமாய் துவங்கும், குதூகலம் நிறைந்திருக்கும்
தேர் வரும் பாதை எல்லாம் திருவிழா போலிருக்கும்;

வடம்பிடிக்கும் பாவனையில் வருகின்ற  பலபேரில்
ஒருசிலரின் உதவியுடன் உருண்டோடும் உற்சவர் தேர்
திருப்பங்கள் வந்துவிட்டால் திட்டமிடல் அவசியமாம் 
விருப்பத்திற்கு ஏற்றவாறு விவரமின்றி வடம்பிடித்தால்
அனுபவத்தின் முதிர்ச்சியின்றி ஆளுக்கொரு திசையிழுத்தால்
ஆலயத்தேர் என்றாலும் அச்சாணி முறிந்து விடும்;

தெருவிலே நின்ற கூட்டம் தேரடி சேர்வதில்லை
தேரிலே எப்பொழுதும் மூலவர் வருவதில்லை
கடவுள் பவனி வரும் தேரோட்டம் என்பது -
காலம் இழுத்துச் செல்லும் நம் கதையை சொல்வது.


Friday, 27 April 2012

உயிர்

பருவமும் உருவமும் வயதின் வரைவு
இன்பமும் துன்பமும் மனதின் புனைவு
போனதும் வருவதும் நிகழ்வின் நினைவு
இருப்பதும் இறப்பதும் காலத்தின் கனவு 

உறவும் பிரிவும் உணர்வின் பிளவு
பொய்யும் மெய்யும் அறிவின் களவு
பற்றும் துறவும் அனுபவ விளைவு
இவற்றில் இருக்கு உயிர்களின் அழகு.







Wednesday, 18 April 2012

விருந்து

ஏதுமற்ற இலையில் நீரெடுத்து தெளிக்கையில்
ஒழுங்கற்று விழுந்திடும் துளிகளாய் காலம்
துளிகளை துடைத்தபின் துப்பரவாய் இருப்பதாக
நினைத்திடும் மனதுக்கு கிடைப்பதே ஞானம்.

வயதுகளின் இலையில் வைக்கப்படும் உணவை,
நிகழ்வுகளின் சுவையில் நிரம்பிடும் உணர்வை,
காலத்தின் விரல்கள் வழித்து உண்ட பிறகு
ஞாபகப்  பருக்கைகளே மீதமுள்ள மனது.

நினைவின் நாக்கு தீண்டும் இலையில்
இனிவரும் பொழுதுகள் இருக்குது உலையில்
காலம் நம்மை சமைக்கும் கலையில்
வாழ்வின் ருசி பசிக்கும் வரையில்.


  

Friday, 30 March 2012

சிகை திருத்தகத்தில் ஒரு நாள்...

நெடுந்தூக்கம் கலைந்திட்ட ஞாயிறு காலை
கண்ணாடியின் முன்னின்று பார்த்திட்ட வேளை
நாளை என்று நாட்கள் தள்ளி வளர்ந்திட்ட முடிகள்
முகம் மறைக்க முன்னே வந்து விழுந்திட்ட நொடிகள்
இன்றேனும் என்றெண்ணி சில நிமிட நடையில்
நானும் அமர்ந்திருந்தேன் முடிவெட்டும் கடையில்.

கடவுள் படம் கவர்ச்சி படம் இரண்டும் இருக்க
கள்ளம் கண்ணில் இருந்த சிலர் நடிகையை பொறுக்க
வயதில் தளர்ந்த முதியவர்கள் அமைதியாய் இருக்க
காற்று வரா மின்விசிறி சத்தங்கள் கொடுக்க
நாளிதழ் ஒன்றை பகிர்ந்து நால்வர் படிக்க
அவற்றில் உள்ள செய்திகளின் விமர்சனம் நடக்க
அவரவர் வாழ்க்கை முறை அதன்வழி கடக்க
அரசியலும் ஆன்மீகமும் அறையினில் தெளிக்க
கேட்டும் கேட்க்காதது போல் நானும் களிக்க
கடைக்காரர் அழைத்தார் என்னை மழிக்க.

சலவை செய்த வேட்டியினை சட்டென்று போர்த்தி
பழைய பாட்டில் தண்ணீரை சாரலாய் ஊற்றி
நன்றாய் தலையினில் ஈரத்தை ஏற்றி
கத்திரியும் சீப்பும் கைகளில் மாற்றி
நம்சிகை அழகு செய்யும் நாவிதர் போற்றி.

சீப்பின் ஊடுருவல் சிலிர்ப்பினை ஊட்ட
காதருகில் கத்திரி கூச்சம் காட்ட
இரண்டின் சுகத்தில் இமைகள் மூட
விழித்து நம்முகத்தை நாமே தேட
இறுதி கட்ட நடவடிக்கை இதிலும் உண்டு
இங்கங்கு அசையாமல் இருத்தல் நன்று.

நாடுகளுக்கிடையில் உள்ள பிரிவினை போல
பின்தலையின் எல்லையிலும் சிக்கல்கள் உண்டு
அவரவரின் விருப்பதிற்கேற்ப அளவை வைத்து
நேர்கோட்டில் நேர்த்தியாய் வடிவம் வெட்ட
கத்திரி உதவாது கத்தியே வேண்டும்.

பின்னாடி கண்ணாடி பிடித்தபடி நின்று
தன்வேலை நன்றாக இருக்கிறதா என்று
கேட்கின்ற அவரிடத்தில் புன்னகை காட்டி
போதும் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டி
அதற்குரிய பணத்தை அவரிடம் நீட்டி
வீடுவந்து குளித்து உண்ட பின்வரும் தூக்கம்
அரசனுக்கும் ஆண்டிக்கும் பொதுவான சொர்க்கம்.