Wednesday, 13 June 2012

மழை விழும் பொழுது...

வீதியெங்கும் விரல் பதித்து
வட்ட வட்ட புள்ளி வைத்து
நீர்க் கோலம் போட்டபடி
ஊர் சுற்றும் மழை.

மேகங்களில் உறங்கி
வானத்தில் இறங்கி
கார் காலத் தேர் ஏறி
ஊர் வந்து சேர் மழை.

உடை நனையும் என்று நினைத்து
குடை விரித்து நாம் பிடித்தால்
மழைக்கு வருத்தம் வரும்
மண் மேல் புரண்டு அழும்.

மாபெரும் ம‌ழையின்
ஓரிரு துளிகள்
கையில் ஏந்திப் பார்
க‌ளிப்பில் நீந்திப் பார்.

Saturday, 2 June 2012

கடலின் காலடியில்...

தொடுவானில் சூரியன் கடலில் விழும் மாலை
காய்ச்சிய இரும்பாய் கடல் சிவக்கும் வேளை
பார்க்கின்ற அனைவருக்கும் காலத்தின் ஓலை
வாசிக்கத் தருவதே கடலுக்கு வேலை.


நினைவின் குமிழே நுரையாகும்
நினைக்க நினைக்க அலையாகும்
வருவதும் போவதும் கரையாகும்
வாழ்க்கை வடிவம் கடலாகும்.


கரையில் இருக்கும் கண்களுக்கு
மனதில் வலிக்கும் புண்களுக்கு
எளிதில் அமைதி ஏற்படுத்தும்
அலையின் மருந்து அற்புதமே!

தொட்டுப் போன‌ அலை - ந‌ம்மேல்
ஒட்டி வைக்கும் மணல் - அதில்
எட்டிப் பார்க்கும் கால‌ம் - கை
த‌ட்டிச் சிரிக்கும் க‌ட‌ல்.