Saturday, 23 March 2013

வனப்பிரஸ்தம்...


அறிந்தவைகளில் ஆசை வைத்து
ஆசைகளில் நியாயப்படுத்தி
நியாயங்களை அர்த்தப்படுத்தி
அர்த்தங்களை மகிழ்ச்சியாக்கி
மகிழ்ச்சியை மையமாக்கி
மையத்தை மனதில் வைத்து
வையத்தில் வாழ்வதையே
உய்வதற்கான வழிகள் என்று
நெய்யப்படுகிறது நேர்த்தியின்றி
வாழ்வியல் விதிமுறைகள்;
விதிமுறை பற்றிய கேள்விகளை
மதிமுழுதும் வீசியபடி
முன்னறிவிப்பு ஏதுமின்றி
முன்செல்கிறது காலம்
முதுமையை முகர்ந்தபடி...

Saturday, 16 February 2013

இலை மறை காய்...


அசைந்த மரம்
இசைந்த இலை
உதிர்தலில் உள்ளது
உறவும் பிரிவும்.

ஒரு சருகின் இருப்பை
உள்ளடக்கி உருவாவதே
ஓரு விதையின் கோட்பாடு.

பெருவெள்ளம் அடித்துச் செல்லும்
இலையில் தத்தளிப்பது
மரத்தின் நினைவு.

எத்தனை மரங்கள்
எத்தனை இலைகள்
இலைகள் அறியுமா
விதையின் கதை?

Friday, 25 January 2013

மலையேற்றம்

முந்தைய காலம் தொட்டு முகாந்திரம் ஏதுமின்றி
மந்தையாய் ஒரு கூட்டம் மலையேறி மாய்கிறது
அடிவாரத்தில் வசதிகள் அருகாமை என்பதனால்
ஆகாய விசாலம் அறிந்திட அவதானமில்லை;
மெய்யுணர்வின் பாதையொன்றே
மேலேறும் வழி எனவே
பிணைந்திருக்கும் பொருளெதுவும்
பின்தொடர்ந்து வருவதில்லை;
கண்களின் விரிவோ
காட்சியின் செறிவோ
காலத்தின் பரிவோ
காயத்தின் முதிர்வோ
சிலதால்...சிலதாய்...சிகரம்.

Sunday, 13 January 2013

பொங்கலுக்கேற்ற அல்வா...


ஆறுகளில் தண்ணியில்லை ஊற்று ஊற மண்ணுமில்லை
பக்கத்தில் உள்ளோருக்கு பகிர்ந்திடும் எண்ணமில்லை
பக்குவமாய் பேசித் தீர்க்க பெரியோர்கள் இங்குமில்லை
பகல்கொள்ளை அடிக்கும் கட்சிகளுக்கு பஞ்சமில்லை
வர்க்கபேதம் வளர்க்கும் வன்முறைகள் கொஞ்சமில்லை
ஒவ்வொரு துறையிலும் நிர்வாக சீர்கேடு
தனிமனித ஒழுக்கமோ படுது பெரும்பாடு
ஒய்யார கொண்டைக்குள் ஒராயிரம் புழுக்கூடு
இப்படித்தான் இருக்குது நம் தமிழ்நாடு
இத்தனை அல்வா நமக்கென இருக்கு
பொங்கலும் கரும்பும் தனியே எதற்கு?

Saturday, 22 December 2012

கால ஞானம்


இன்று என்பது நாளையின் நேற்று
இவற்றின் தொகுப்பே காலத்தின் ஊற்று
இடையே இயங்குது நம் மூச்சுக் காற்று
இப்பொழுதும் எப்பொழுதும் இதற்கில்லை மாற்று;

ஒவ்வொரு நொடியையும் அதன்வழி பார்த்து
வருகின்ற அனுபவம் வயதுடன் சேர்த்து
கடக்கின்ற அனைத்தையும் காலத்தில் கோர்த்து
காலத்தின் வழியே கடவுளை நோக்கு.

Sunday, 2 December 2012

மழை நோய் மருத்துவம்...


உச்சரித்து உச்சரித்து உதடுகளில் ஊற வைத்து
நாவினிலே நனைத்தெடுத்து நரம்புகளுக்கு அனுப்பி வைத்து
உதிரத்தில் கரைந்து உயிருக்குள் பரவும்
மழையை சாப்பிட்டால் மனம் பெறும் தித்திப்பால்
ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுமா என்று
மருத்தவரிடம் கேட்டேன் மழையின் ருசியை...
மனநோயா உனக்கென மருத்துவர் கேட்டார்
மழை நோய் எனக்கென மறுமொழி சொன்னேன்.

பசி மிக அதிகம் எடுக்கிறது
பகலிலும் சோர்வு கொடுக்கிறது
வியர்வை அதிகம் வழிகிறது
வீணாய் கோபம் வருகிறது
உழைப்பின் வேகம் குறைகிறது
உணர்வும் களைப்பு பெறுகிறது
மழை பெய்ய மறுக்கும் பொழுதுகளில்
மனம் மிக அடையும் பழுதுகளால்
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சாத்தியம் என்று நினைப்பதனால்
சந்தேகம் வந்தது என்று சொன்னேன்
சங்கடத்தில் அவர் நெளிந்தார்...

மாத்திரை ஏதும் இல்லையென்றும் - மழை
யாத்திரை போவதே நல்லதென்றும் - தினம்
மழைக்காக மருகிடும் மனம்
மனிதருக்கெங்கே புரிந்திடும்?

Sunday, 18 November 2012

புத்தகம் படிப்பது எப்படி?


காகித வாசனை நேசி
கருத்தை நன்றாய் வாசி
பிடித்தமோ இல்லையோ யோசி
நல்லதை மனதுடன் பேசி
அல்லதை குப்பையில் வீசி
வடிகட்டி வாழ்க்கையில் பூசி
கழுவலாம் ஜென்மத்து பாசி
புத்தகம் நெஞ்சுக்கு ஊசி
பிறகெதற்கு போகணும் காசி?