Wednesday, 18 April 2012

விருந்து

ஏதுமற்ற இலையில் நீரெடுத்து தெளிக்கையில்
ஒழுங்கற்று விழுந்திடும் துளிகளாய் காலம்
துளிகளை துடைத்தபின் துப்பரவாய் இருப்பதாக
நினைத்திடும் மனதுக்கு கிடைப்பதே ஞானம்.

வயதுகளின் இலையில் வைக்கப்படும் உணவை,
நிகழ்வுகளின் சுவையில் நிரம்பிடும் உணர்வை,
காலத்தின் விரல்கள் வழித்து உண்ட பிறகு
ஞாபகப்  பருக்கைகளே மீதமுள்ள மனது.

நினைவின் நாக்கு தீண்டும் இலையில்
இனிவரும் பொழுதுகள் இருக்குது உலையில்
காலம் நம்மை சமைக்கும் கலையில்
வாழ்வின் ருசி பசிக்கும் வரையில்.


  

Friday, 30 March 2012

சிகை திருத்தகத்தில் ஒரு நாள்...

நெடுந்தூக்கம் கலைந்திட்ட ஞாயிறு காலை
கண்ணாடியின் முன்னின்று பார்த்திட்ட வேளை
நாளை என்று நாட்கள் தள்ளி வளர்ந்திட்ட முடிகள்
முகம் மறைக்க முன்னே வந்து விழுந்திட்ட நொடிகள்
இன்றேனும் என்றெண்ணி சில நிமிட நடையில்
நானும் அமர்ந்திருந்தேன் முடிவெட்டும் கடையில்.

கடவுள் படம் கவர்ச்சி படம் இரண்டும் இருக்க
கள்ளம் கண்ணில் இருந்த சிலர் நடிகையை பொறுக்க
வயதில் தளர்ந்த முதியவர்கள் அமைதியாய் இருக்க
காற்று வரா மின்விசிறி சத்தங்கள் கொடுக்க
நாளிதழ் ஒன்றை பகிர்ந்து நால்வர் படிக்க
அவற்றில் உள்ள செய்திகளின் விமர்சனம் நடக்க
அவரவர் வாழ்க்கை முறை அதன்வழி கடக்க
அரசியலும் ஆன்மீகமும் அறையினில் தெளிக்க
கேட்டும் கேட்க்காதது போல் நானும் களிக்க
கடைக்காரர் அழைத்தார் என்னை மழிக்க.

சலவை செய்த வேட்டியினை சட்டென்று போர்த்தி
பழைய பாட்டில் தண்ணீரை சாரலாய் ஊற்றி
நன்றாய் தலையினில் ஈரத்தை ஏற்றி
கத்திரியும் சீப்பும் கைகளில் மாற்றி
நம்சிகை அழகு செய்யும் நாவிதர் போற்றி.

சீப்பின் ஊடுருவல் சிலிர்ப்பினை ஊட்ட
காதருகில் கத்திரி கூச்சம் காட்ட
இரண்டின் சுகத்தில் இமைகள் மூட
விழித்து நம்முகத்தை நாமே தேட
இறுதி கட்ட நடவடிக்கை இதிலும் உண்டு
இங்கங்கு அசையாமல் இருத்தல் நன்று.

நாடுகளுக்கிடையில் உள்ள பிரிவினை போல
பின்தலையின் எல்லையிலும் சிக்கல்கள் உண்டு
அவரவரின் விருப்பதிற்கேற்ப அளவை வைத்து
நேர்கோட்டில் நேர்த்தியாய் வடிவம் வெட்ட
கத்திரி உதவாது கத்தியே வேண்டும்.

பின்னாடி கண்ணாடி பிடித்தபடி நின்று
தன்வேலை நன்றாக இருக்கிறதா என்று
கேட்கின்ற அவரிடத்தில் புன்னகை காட்டி
போதும் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டி
அதற்குரிய பணத்தை அவரிடம் நீட்டி
வீடுவந்து குளித்து உண்ட பின்வரும் தூக்கம்
அரசனுக்கும் ஆண்டிக்கும் பொதுவான சொர்க்கம்.















Wednesday, 7 March 2012

காலம்

பொருந்தாத நிகழ்வுகளில் சிக்க வைக்கும்
வருத்தங்களில் மனதை விக்க வைக்கும்
விரும்பிய உணர்வுகளை விற்க வைக்கும்
திருத்தங்கள் செய்து கற்க வைக்கும்
விழுந்தாலும் மறுபடி நிற்க வைக்கும்
நமக்குள் நம்பிக்கை தக்க வைக்கும்


செய்பவை சரியென்று சொல்ல வைக்கும்
செய்தபின் அவற்றினுள் முள்ளை வைக்கும்
ரணங்கள் உண்டாக்கி  ஆற வைக்கும்
குணங்களில் குறுக்கிட்டு மாற வைக்கும்
உடனிருந்தே சமயங்களில் கவிழ வைக்கும்
முதிர்ச்சியின் மொட்டுக்கள் அவிழ வைக்கும்


இல்லாதவற்றின் பின் ஓட வைக்கும்
இருப்பின் பொருளை தேட வைக்கும்
இவற்றின் நடுவே வாழ வைக்கும்
இறுதியில் நம்மை மாள வைக்கும்
காலம் மீதொரு காதல் எனக்கு
கசப்பும் இனிப்பும் நாவில் இருக்கு.


  

Friday, 24 February 2012

கடிதங்கள்...

மனதிற்குள் கையை விட்டு நாம் எடுத்த உணர்வுகளை
மையை ஊற்றி மசிய வைத்து பிரதி எடுக்கும் வடிவங்களை
வார்த்தைகளில் படிய வைத்து தாள்களிலே தங்க வைக்கும்
கடிதங்கள் நமக்கு  காலத்தின் உயில்கள்;

அஞ்சல்காரர் வருகை எதிர்பார்த்த தினங்கள்
பிடித்தவரின் கடிதம் பிரித்திட்ட கனங்கள்
இருகடித இடைவெளியில் உருண்டோடும் நாட்களில் -
காத்திருப்பின் வாசனையில் பூத்திருக்கும் யோசனைகள்
அன்பிற்கு உரமாக அடிமனதில் இறங்கி விடும்
காலத்தை கூட்டி வந்து காகிதத்தில் பூட்டி வைக்கும்
அற்புத குணம் அத்தகைய கடிதம் தரும்;

கடிதங்களின் கடிவாளம் காலத்தை பிடித்திழுக்க
எழுத்தின் மீதேறி எண்ணத்தில் அமர்ந்தபடி
ஞாபக குதிரையின் நாலுகால் பாய்ச்சலிலே
நினைவுச் சாலையிலே நீண்ட தூரம் போய்வரலாம்;

விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் கொடுத்த விலையோ-
பணத்தின்பின்  அனைவரும் பறக்கின்ற நிலையோ-
அன்புப் பயிரில் அவசர களையோ-
அற்புதமான எதையும் அவமதிக்கும் கலியோ-
மின்னஞ்சல் நன்று என்றோம் குறுஞ்செய்தி கொண்டு வந்தோம்
கடிதம் எழுதும் கலையை கையாலே கொன்று போட்டோம்.

இனிமேல் வாராது கடிதமெழுதும் காலங்கள்
இருக்கின்றவற்றையேனும் பாதுகாப்போம் வாருங்கள்
அன்பின் பசை அதிலிருக்கும் தேடுங்கள்
ஆண்டுக்கொரு முறை அதை படித்து பாருங்கள்
அடுத்த தலைமுறைக்கு சொத்தாக தாருங்கள்.

Thursday, 9 February 2012

பிறப்பு

ஊசிமுனையிலும் சிறுத்த உயிரணுவில்
வீசி எறியப்பட்ட வினையின் விதையுள்  
நாசியில்  காற்று பெற்று உலவும் நாமும்
நேசிக்க நேர்கின்ற உறவை உணர்வை
பூசித்து சேகரிக்கும் பொருளை பணத்தை
வாசித்துப்   பார்க்கின்ற நேரம் வந்தால் - அது
யோசிக்கத் தூண்டும் ஞானம் தந்தால்
காசிக்குப்  போய்வரத்  தேவை இல்லை
காலநதி மட்டுமே இங்கே கங்கை.



Thursday, 19 January 2012

வயதின் சுவை...

நாற்பது அருகில் வந்தாச்சு நல்லது கெட்டது  புரிஞ்சாச்சு
உலகின் நிறங்கள் தெளிவாச்சு உறவும் பிரிவும் இயல்பாச்சு
தாயைத் தீயில் இட்டாச்சு தவிப்பு நிறைய பட்டாச்சு
வலிகளில் வலிமை சேர்த்தாச்சு வழிபோக்கர்கள் பார்த்தாச்சு
தாரம் தாய்போல் ஆயாச்சு பாரம் பகிரும் தோளாச்சு
ஒவ்வொரு நாளும் பிறப்பாச்சு செயல்கள் மேலும் சிறப்பாச்சு
அன்பு இன்னும் அழகாச்சு அறிவின் தேடல் விரிவாச்சு
பார்வைகள் பலவும் புதுசாச்சு பழையவை அவற்றின் விழுதாச்சு
மனதை நன்றாய் உழுதாச்சு மலர்கள் மட்டும் பயிராச்சு
நடுத்தர வயதின் முழுவீச்சு நாற்பதில் தெரியும் எனப்பேச்சு
காலம் ஊன்றுகோல் போலானால் கவலைகள் எல்லாம் கால்தூசு.







Monday, 9 January 2012

புகார்*

நதியில் குளித்தால் நம் கர்மம் கழியுமென்று
முழுதாய் முங்குதல் அவ்வளவு எளிதன்று;
ஆழம் பார்க்கும் நோக்கில்  வைத்தேன் கால்கள்
அழுக்கெடுக்கும் போக்கில்  கடித்தன மீன்கள்
உதறவும் மனமின்றி ஊன்றிடும் குணமின்றி
அரைகுறையாய் போடுகிறேன் நீரில் முழுக்கு
ஆங்காங்கே கரைகிறது ஆயுள் அழுக்கு
நதியில் முகத்துவாரத்தில் நகைக்கிறது காலம்
நம்பித் தொடர்கிறேன் நானும் அதை நாளும்...


*ஆறு கடலில் கலக்குமிடம்.